இலங்கை முழுவதும் இன்று (22) நடைபெறும் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 255,062 சிங்கள மொழிமூல பரீட்சாத்திகளும், 85,466 தமிழ் மொழிமூல பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர்.
இவர்களுக்கென நாடளாவிய ரீதியில் 2943 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களை இணைப்பதற்காக 496 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை காலை 9.30 மணியில் இருந்து 10.30 வரை முதலாவது வினா பத்திரமும், 11.00 மணியில் இருந்து 12.15 மணி வரை இரண்டாவது வினா பத்திரமும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
பரீட்சாத்திகளுக்காக அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் அனுமதி அட்டையின் மேல் பகுதியை பிரித்து தமது வீடுகளில் பாதுகாப்பாக வைத்து விட்டு மற்றைய பகுதியை பரீட்சை நிலையத்திற்கு கொண்டு சென்று மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக பரீட்சை நிலையங்களுக்கு மேலதிகமாக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் கல்வி வலய மட்டத்தில் ஒவ்வொரு பரீட்சை நிலையங்கள் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மத்தியில் தடிமன் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பெற்றோர் உரிய தரப்பினருடன் அல்லது பொது சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு மாணவர்களை பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பிரதி பரீட்சை ஆணையாளர் எம் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.