தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி www.botanicgardens.gov.lk என்பதாகும்
இலங்கை பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் நிகழ்ச்சியாக இணையத்தளம் வடிவமைக்கப்பட்டதென திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெலோமி கிருஷ்ணராஜா தெரிவித்தார்.
பேராதனைப் பூங்காவில் நேற்று (22) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு திருமதி கிருஷ்ணராஜா தகவல் அறிவித்தார்.
இந் நிகழ்வில் சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கவர்ச்சிகரமான இணையத்தளத்தில் நாட்டிலுள்ள தாவரவியல் பூங்காக்கள் தொடர்பான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பூங்காக்களை நாடும் பார்வையாளர்கள், இதனுடாக சகல விபரங்களையும் முறையாக பெற்றுக் கொள்ள முடியும். இது சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கும் அடித்தளம் இடுமென திருமதி ஷெலோமி கிருஷ்ணராஜா தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி உரையாற்றுகையில்,
சுற்றுலாத்துறை சார்ந்த இலக்குகளை அடைந்து நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியில் தேசிய தாவரவியல் மற்றும் விலங்கியல் பூங்காக்கள் அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்றார்.
இந்த நடைமுறையில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது முக்கியமானது. மாற்று வழிகள் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளுக்கும் சுற்றுலாத்துறை அமைச்சு சகல உதவிகளையும் வழங்குமென அவர் மேலும் தெரிவித்தார்.