பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் 16 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண நேற்று (25) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெரிவிக்கையில்
பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பொதுவாக முதல் டோஸைப் பெற்று 4 வாரங்களுக்குள் வழங்கப்படுகின்றது. ஆனால் இலங்கையில் தடுப்பூசி நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, 16 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டு 3 மாதங்களுக்கு பின்னரே இரண்டாவது டோஸை வழங்கப்படுகின்றது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வயதிற்கு உடபட்டவர்களுக்கு, முதல் டோஸை பெற்றுக் கொண்டவர்களின் இரண்டாவது டோஸைப் பெற்றுக் கொள்ளும் காலம் நேற்றுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் நேற்று முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
20 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த வகை இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருந்தபோதிலும், மூன்று மாதம் நிறைவடைந்திருந்தால் அவர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு போதுமான பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
உலகெங்கிலும் ஓமிக்ரோன் திரிபு காரணமாக கொவிட் 19 இன் புதிய அலை உருவாகி வருவதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இலங்கையும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே உடனடியாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் வலியுறுத்தினார்.
அத்துடன், சிலர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு 6 – 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளதால், முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. அவர்கள் கண்டிப்பாக மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.