இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் தூதுவர் அதிமேதகு யூரி மடேரி பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) நேற்று (2) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ரஷ்ய தூதுவர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு இடையில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பல கலந்துரையாடப்பட்டன.
தற்போதைய தொற்று நோய் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் எதிர்கொள்ளும் பொதுவான சிரமங்கள் தொடர்பாக கலந்துரையாடிய பாதுகாப்புச் செயலாளர், அந்தப் பிரச்சினைகளை வெற்றிகொள்ள சாத்தியமான தீர்வுகளைக் காண்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட்-19 சூழ்நிலைகளின்போது ரஷ்யாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பாளர் பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ ஸ்கோடா மற்றும் மேலதிக செயலாளர் பிபிஎஸ்சி நோனிஸ், சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஹர்ஷ விதானாராய்ச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.