ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் கொள்வனவு
இந்தியா மத்திய அரசு முறைப்படி ஒப்படைத்தது
ஏர் இந்தியாவை மீண்டும் திரும்ப பெற்றள்ள நிலையில் உலகத் தரம் வாய்ந்த விமான சேவையை வழங்குவோம் என டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் நேற்று (27) மத்திய அரசு முறைப்படி ஒப்படைத்தது. இதற்காக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்து பேசினார்.
ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. கடந்த 1953-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. தற்போது கடும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதனை வாங்க ஆளில்லாமல் இருந்தது.
பின்னர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.
டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் வாங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
ஏர் இந்தியாவை வாங்க தலேஸ் நிறுவனம் குறிப்பிட்ட மதிப்பு 18,000 கோடி ரூபாய் ஆகும். இதில் 15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்கான பாகமாகும், மீதமுள்ளவை மத்திய அரசுக்கு செலுத்தப்படும்.
இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் மத்திய அரசு முறைப்படி ஒப்படைத்தது.(இந்து)