அக்குறணை பிரதேச சபை தவிசாளர் கண்டி வைத்தியசாலைக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்பு
கண்டி – அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் மற்றும் கண்டி ‘Sofa City’ உரிமையாளர் மர்சூக் ஹாஜியார் ஆகியோரினால் இன்று (03) கண்டி தேசிய வைத்தியசாலைக்கு ஒரு தொகை (Corona Safety Kits) கொரோனா பாதுகாப்பு அங்கிகள் மற்றும் முகக் கவசங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.
வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ரிஸ்வி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குறித்த பொருட்கள் கண்டி தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் திருமதி இரேஷா பெர்னாந்து அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அக்குறணை மற்றும் கண்டியின் ஏனைய பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் வசிப்பவர்களுக்கான உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை பிரத்தியேகமான அமைப்பு ஒன்றின் மூலம் பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளருடன் பிரதேச சபை தவிசாளர் கலந்துரையாடும்பொழுது தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரசவ அறைக்கான தளபாடங்கள் மற்றும் அத்தியவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்கும், கண்டி மாவட்டத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் கவனம் செலுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.