இலங்கையில் தற்போது ஒமிக்ரான் மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.இலங்கையில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் ஒமிக்ரான் தொற்றாளர்கள் என அவர் கூறுகின்றார்.
‘இலங்கையில் 95 வீதத்திற்கும் அதிகமான அளவு ஒமிக்ரோன் பிறழ்வே பரவி வருகிறது என்று ஆய்வு கூட பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது” என அவர் குறிப்பிடுகின்றார்.
நாட்டில் ஒமிக்ரான் அலை ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதாக தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் உபுல் திஸாநாயக்க தெரிவிக்கின்றார். ஒமிக்ரான் தொற்று தற்போது சமூகமயமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் தரவுகளை விடுவும், ஒமிக்ரான் சமூகத்திற்குள் பரவியுள்ளதாக எண்ண முடிகின்றதென டொக்டர் உபுல் திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
இலங்கையில் கடந்த சில மாதங்களில் பின்னர், கடந்த இரு தினங்களில் 900திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொழும்பு மாவட்டத்திலேயே ஒமிக்ரோன் பிறழ்வு அதிகளவில் பரவி வருவதை அவதானிக்க முடிவதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இதுவரை 6,08,065 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 577,314 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், 15,386 கோவிட் உயிரிழப்புக்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கோவிட் சிகிச்சை நிலையங்களில் 15,365 கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது.
ஆக்சிஜன் தேவைப்பாடுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் சுகாதார தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.(பிபிசி)