‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் விபத்திற்குள்ளானதால் கொழும்பு துறைமுக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படவில்லை என்று துறைமுக அதிகார சபையின் உப தலைவர் கலாநிதி பிரசாத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலை இந்தியா, டுபாய், கட்டார் ஆகிய நாடுகள் பொறுப்பேற்கவில்லையெனத் தெரிவிக்கப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானதென துறைமுக அதிகார சபையின் அதிகாரியான நிர்மால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீ, சீரற்ற காலநிலை காரணமாக கட்டுப்படுத்த முடியாது போனதாகவும் அவர் கூறினார்.
தீப்பற்றிக் கொண்ட கப்பலின் ஒரு பகுதி தற்போது கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்படுமிடத்து அதிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக சமுத்திரப் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து செயற்படத் தயாரென்றும் கடற்படை தெரிவித்துள்ளது.