ஜனவரி மாதத்தில் 7656 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர நேற்று (31) தெரிவித்தார்.
2021 ஜனவரியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2122 ஆகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
பொதுவாக மூன்று வருடங்களுக்கு ஒருமுறை டெங்கு நோய் பரவுவது வழக்கமாக இருப்பதாகவும், இந்த வருடம் டெங்கு பரவலாம் என கடந்த 15 வருட அனுபவத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாகவும், கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அது ஒரு தீவிர தேசிய சுகாதாரப் பிரச்சினையாக மாறும் என்றும் அவர் கூறினார்.
டெங்கு பரவுவதை தடுக்க முடியும் என்றும், டெங்கு குடம்பிகள் பரவாமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக டெங்கு நுளம்புகளை பரப்பும் வகையில் தண்ணீர் தேங்கும் இடங்களை அழித்து வாரத்தில் ஒரு நாளாவது சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.