பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் உயர்ந்தபட்ச பலனை அடைவதற்கு, அனைவரும் நாட்டுக்கான தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.
சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான நாட்டின் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அது போன்றே, பொறுப்புகளும் உள்ளன என்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், அந்தப் பொறுப்புகளை மறந்து உரிமைகள் பற்றி மாத்திரம் பேசுவது உகந்ததல்ல என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் இன்று (04) இடம்பெற்ற 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு தேசத்துக்காக உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் கொண்டாட்ட இடத்துக்கு வருகை தருவதை அறிவிக்கும் வகையில் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. அதன் பின்னர், ஜனாதிபதி அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து,
பாடசாலை மாணவ, மாணவியரினால் தேசிய கீதம் பாடப்பட்டது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர், ஜனாதிபதி அவர்களை விசேட மேடைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, பாடசாலை மாணவிகளால் “ஜயமங்கள கீதம்” மற்றும் “தேவோ வஸ்ஸது காலேன” கீதம் ஆகியன பாடப்பட்டன.
தொடர்ந்து, இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவேந்தும் வகையில் 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனையடுத்து, ஜனாதிபதி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக, 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள் தனது தேசத்துக்கான உரையை ஆரம்பித்தார்.
“நாட்டுக்கு முன்னால் காணப்படும் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின், அர்ப்பணிப்புகளின் ஊடாகவே அவை சாத்தியப்படும். கடினமான காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவ்வாறான கடினமான காலங்களை எதிர்கொள்வதற்கு, பலமிக்க மனிதர்கள் அவசியம். நாம் தற்காலத்தில் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் அனைத்தும் நீண்டகாலப் பிரச்சினைகள் அல்ல. நேர்மறையான அணுகுமுறைகளுடன் அவ்வாறான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க முடியும்” என்று, ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
“நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்துக்கொண்டு பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதை விட, அவற்றுக்கான நீண்டகால மற்றும் குறுகியகாலத் தீர்வுகளைக் காண்பதே காலோசிதமானது. அரசாங்கம் தற்போது அதற்கான அவதானத்தையே செலுத்தியுள்ளது” என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
நாட்டுக்கு எடுத்துக்காட்டாக எப்போதும் செயற்படுமாறு அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டு மக்களுக்கு அந்த முன்னுதாரணத்தைக் காட்டும் போதே, பெரும்பாலான மக்கள் உங்களைப் பின்பற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
வெற்றிகொள்ளப்பட்டுள்ள சுதந்திரத்தை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநாட்டுவதாக வழங்கிய உறுதிமொழியை எப்போதும் காப்பதாகவும் குறிப்பிட்டார்.
சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை அடைந்த பெருமைமிக்க தேசத்தை உருவாக்குவதற்காக இணையுங்கள் என்று, தேசபக்தியுள்ள மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.
74ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம், கொவிட் தொற்றொழிப்புக்கான சுகாதார வழிகாட்டுதல்களுடன், நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு மற்றும் தேசிய மாணவப் படையினர், இதற்கான அணிவகுப்பு மரியாதைகளில் ஈடுபட்டிருந்ததோடு, இலங்கையின் அனைத்துச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அழகிய கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் அனைத்து மதத் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரமுள்ள ஐந்தாவது ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பு பிரதானிகள், அரச அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளிட்ட பலரும் இந்தக் கொண்டாட்ட கலந்துகொண்டிருந்தனர்.