இந்திய சினிமாவின் ‘நைட்டிங்கேல்’ லதா மங்கேஷ்கர் காலமானார்
தனது 13-வது வயது முதல் ஏறக்குறைய 80 ஆண்டுகாலம் இந்திய இசைக் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த குரல் இன்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. ஆம், பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற பழம்பெரும் பாடகி, இந்திய சினிமாவின் ‘நைட்டிங்கேல்’ லதா மங்கேஷ்கர் இன்று (06) மறைந்து விட்டார்.
1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். ஐந்து குழந்தைகளில் மூத்தவரான லதா மங்கேஷ்கர் தன் ஐந்தாவது வயதிலேயே இசைப் பயிற்சியை தொடங்கி விட்டார்.
தன்னுடைய 13 வயதில் தந்தையை இழந்து குடும்ப பாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். லதா தன் தந்தையின் நெருங்கிய நண்பரான விநாயக் என்பவரது உதவியுடன் 1942ஆம் ஆண்டு மராத்தி திரைப்படமான ‘கிஸி ஹசாய்’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் அதே ஆண்டு வெளியான ‘பஹ்லி மங்களா கவுர்’ என்ற படத்தில் லதாவுக்கு ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பையும் லதா பெற்றார். 1943ஆம் ஆண்டு வெளியான ‘கஜாபாவ்’ என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக ஒரு இந்திப் பாடலை லதா பாடினார்.
1945 ஆம் ஆண்டு மும்பைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த லதா அங்கு இந்துஸ்தானி இசையை கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அதன் பிறகு விநாயக்கின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களில் லதாவும் அவரது தங்கை ஆஷாவுக்கும் சின்னச் சின்ன வேடங்கள் கிடைக்கத் தொடங்கின.
இந்திய இசையின் வரலாற்றை லதா மங்கேஷ்கரை தவிர்த்து எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு ஏறக்குறைய மொழிகளில் 36 பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள அந்த மந்திரக் குரல் இசை ரசிகர்களின் மனதில் என்றென்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.(இந்து)