தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், நேற்று (22) கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில் இடம்பெற்றது.
1979ஆம் ஆண்டு 45ஆம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனம், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் உள்ளிட்ட பெருந்தோட்டத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் தொழில்சார் திறன்களை உயர் திறன்களுடன் பேணும் நோக்கில் நடத்தப்பட்டு வருகின்றது.
கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் பரீட்சைகளை நடத்துதல், அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்களுக்கான ஆய்வுகள் மற்றும் ஆலோசனைச் சேவைகளை வழங்குதல் போன்ற பணிகளும் இந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பெருந்தோட்டத்துறை முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தொழில் வல்லுநர்கள் 10 பேருக்குத் தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கெளரவ நிபுணத்துவ அங்கத்துவமும் பெருந்தோட்டத் துறையின் பட்டய நிபுணத்துவ அங்கத்துவம் 09 பேருக்கும், பெருந்தோட்டத் துறைக்குரிய வரையறுக்கப்பட்ட தொழிற்றுறை உறுப்புரிமை 09 பேருக்கும், தொடர்புடைய தொழில்சார் உறுப்புரிமை 05 பேருக்கும், ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டது.
12 பேருக்கான உயர் டிப்ளோமா சான்றிதழ்களும் 86 பேருக்கான டிப்ளோமா சான்றிதழ்களும், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் பயிற்சிகளை நிறைவு செய்த 224 பேருக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தூதுவர்கள், பெருந்தோட்ட மற்றும் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர், பெருந்தோட்டத் துறையில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.