crossorigin="anonymous">
வெளிநாடு

ரஷ்ய – உக்ரைன் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை

பெலாரஸ் எல்லைப் பகுதியில் ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று (28) பேச்சுவார்த்தை நடத்தினர். போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ரஷ்ய தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிழந்தனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை உக்ரைனில் இருந்து 5.2 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டதாக ஐ.நா கூறுகிறது.

நேட்டோ நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரஷ்ய அணு ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் சோய்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே 5-வது நாளாக நேற்றும் கடுமையான சண்டை நடைபெற்றது.

போர் சூழலுக்கு நடுவே பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.

அப்போது உக்ரைன் தரப்பில்பல்வேறு விஷயங்கள் வலியுறுத்தப்பட்டன. போரை உடனடியாக நிறுத்த வேண்டும். தங்கள் நாட்டில் இருந்து ரஷ்யப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டில் ரஷ்யா கைப்பற்றிய கிரிமியா பகுதியை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

உக்ரைனில் நவீனகால நாஜி ஆட்சியை அகற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் நேட்டோவில் இணையக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை ரஷ்யா விதித்ததாகக் கூறப்படுகிறது. இரு தரப்பும் தங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருந்ததால் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 37 − 28 =

Back to top button
error: