“ரஷ்யா தீவிரவாத நாடாக மாறிவிட்டது” – உக்ரைன் ஐனாதிபதி
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளிடையே 6-வது நாளாக நேற்று கடும் சண்டை நடைபெற்றது.
கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தியது. இரு நாடுகளிடையே நேற்று 6-வது நாளாக கடும் சண்டை நீடித்தது. பெலாரஸின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இரு தரப்பும் இன்று 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய ராணுவம் நேற்று தீவிரப்படுத்தியது. அந்த நாட்டின் ஒக்டிர்கா ராணுவ தளத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் 70 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்தனர்.
தலைநகர் கீவ், கார்கிவ், செர்னிஹிப் உட்பட உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய போர் விமானங்கள் நேற்று தீவிர தாக்குதலை நடத்தின. கார்கிவ் நகரில் அமைந்துள்ள அரசு கட்டிடம் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த கட்டிட வளாகம் கடுமையாக சேதமடைந்தது.
ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் சோய்கு நேற்று கூறியதாவது:
மேற்கத்திய நாடுகள், உக்ரைனை பகடை காயாக்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட செய்கின்றன. இந்த அச்சுறுத்தலை முறியடிக்க ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனில் நாஜிக்களின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். எங்களது இலக்கு நிறைவேறும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும்.
உக்ரைனை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. எங்களால் முடிந்தவரை பொதுமக்களின் உயிரிழப்பை தவிர்த்து வருகிறோம். ராணுவ தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் வாலோடிமிர் ஜெலன்கி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட வீடியோவில், “ரஷ்யா தீவிரவாத நாடாக மாறிவிட்டது. கீவ், கார்கிவ் நகரங்களின் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி வருகிறது. கொத்து குண்டுகள் உள்ளிட்ட நாசகர ஆயுதங்களை பயன்படுத்துகிறது. அதிபர் புதின் போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்” என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாக அதிபர் வாலோடிமிர் ஜெலன்கி நேற்று உரையாற்றினார். அவர் பேசும்போது, “எங்களது தாய்மண்ணை காக்க போராடி வருகிறோம். எங்கள் நகரங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. ஆனால் யாராலும் எங்களது ஒற்றுமையை குலைக்க முடியாது.ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உடனடியாக இணைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
உக்ரைனுக்கு 75 போர் விமானங்கள், அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்படும் என்று பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன.
இதுவரை 5,300 ரஷ்ய வீரர்களை சுட்டுக் கொன்றிருப்பதாகவும் 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள், 151 பீரங்கிகளை அழித்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் தெரி வித்துள்ளது.
ரஷ்ய ராணுவ தாக்குதல்களில் உக்ரைனில் இதுவரை 352 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக அந்த நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாடும் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெலாரஸ் ராணுவ வீரர்கள் உக்ரைனின் செர்னிஹிவ் நகரை தாக்கி வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளன. சுமார் 65 கி.மீ. தொலைவுக்கு முக்கிய சாலைகளில் ரஷ்ய பீரங்கிகள், கவச வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தற்போதைய நிலையில் ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.(இந்து)