உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்
ஆக்ரோஷமான தாக்குதலால் உக்ரைன் மக்கள் கடும் பீதி
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையின்படி இந்த போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக எல்லையோர நகரங்கள், தலைநகர் கீவ், முக்கிய நகரமான கார்கிவ் பகுதிகள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. மேலும் ராணுவ தளவாடங்கள் இருக்கும் இடங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் தாக்குதலை நடத்தினர்.
உக்ரைனின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைவதற்காக ரஷ்ய படையினர் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதற்கு வசதியாக ஏவுகணை வீச்சு, குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.
ரஷ்யாவின் இந்த ஆக்ரோஷமான தாக்குதலால் உக்ரைன் மக்கள் கடும் பீதி அடைந்தனர். அவர்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகள், வீடுகளின் அடிப்பகுதிகளில் அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து 10-வது நாளாக நேற்று ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்தது.
இதனிடையே, ரஷ்யா நேற்று உக்ரைனின் 2 நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கான மீட்பு பணிகளுக்காக போர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று ரஷ்ய அரசு அறிவித்தது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல் னோவாகா ஆகிய 2 நகரங்களில் இன்று முதல் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது.
அந்நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறும் பாதைகள் அமைப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் நேற்று பகல் 11 மணி முதல் அமலுக்கு வந்தது.
ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்டபேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 2 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். அவர்கள் வெளியேறுவதற்கான வசதிகளை உக்ரைன் செய்து கொடுத்து வருவதாகத் தெரிகிறது.
போரின்போது ஜேப்பரோஜியா அணுமின் நிலையத்தைக் கைப்பற்றிய ரஷ்யா நேற்று மரியுபோல் துறைமுக நகரை முடக்கியுள்ளது தெரியவந்துள்ளது. மரியுபோல் என்ற துறைமுக நகரத்தை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இதனை அந்த நகரின் மேயரும் உறுதி செய்துள்ளார். இதுதவிர தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பெருநகரங்களில் மீதான தாக்குதல் தீவிரமாகத் தொடர்கிறது.(இந்து)