“நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் கருப்பொருளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு “பெண் முயற்சியாளர்களது உற்பத்திப்பொருட்கள் காட்சிப்படுத்தலும் விற்பனையும்” நிகழ்வு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (08) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கக்சுயின் ஜப்பான் பல்கலைக்கழக முன்னாள் ஆய்வுநிலைப் பேராசிரியர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும்,சிறப்பு விருந்தினராக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சிவராணி நிக்கொலஸ்பிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
2022ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு “உங்கள் பங்களிப்பில் அவர்களின் கரங்கள் வலுச்சேரட்டும் ” எனும் கருப்பொருளுக்கு முன்ணுதாரணமாக பெண் தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து அவர்களின் உற்பத்திப்பொருட்கள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் தற்போதைய கொவிட் நிலைமைக்கேற்ப சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச மட்டத்தில் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களை கௌரவிக்கும் முகமாக சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி வைக்கப்பட்டதுடன், விருந்தினர்களுக்கான நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினுடைய வடமாகாண மற்றும் மாவட்ட இணைப்பாளர்,மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.