“நான் ஓடி ஒளியவும் இல்லை, அஞ்சவும் இல்லை” – உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 13- வது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், “நான் ஓடி ஒளியவும் இல்லை, யாருக்கும் அஞ்சவும் இல்லை” எனத் தெரிவித்து தனது அலுவலகத்தில் இருந்து வீடியோ ஒன்றை உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்தத் தாக்குதை உக்ரைன் அரசு, அந்நாட்டு மக்களின் துணையுடன் எதிர்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வரும் உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக, உக்ரைனில் வசித்து வரும் வெளிநாட்டினரும், அகதிகளாக அந்நாட்டு மக்களும் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.
போர் நிலவரம் குறித்து, அவ்வப்போது வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வரும் உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி, ’ரஷ்யாவின் குறியே என்மீது தான். ஆனாலும் நான் கீவ் நகரத்தை விட்டு வெளியேறப் போவதில்லை’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னர் வெளியிட்ட வீடியோக்களில் ராணுவ வண்டி மற்றும் கீவ் நகரத்தின் கட்டிடம் ஒன்றின் முன்பு நின்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் வீடியோ ஒன்றை ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது அதிபர் அலுவலகத்தில் இருந்து பேசியிருந்தார். அதில் அவர், ” நான் தலைநகர் கீவ் நகரில் தான் இருக்கிறேன். நான் ஓடி ஒளியவும் இல்லை, யாருக்கும் அஞ்சவும் இல்லை. பொதுவாக திங்கள்கிழமைகளை கடினமான நாள் என்பார்கள். போர் நடக்கும் ஒவ்வொரு நாளும் கடினமான நாளே. அவை அனைத்தும் திங்கள் கிழமைகளே.
ஒவ்வொரு நாள் போராட்டமும், ஒவ்வொரு நாள் உயிர் பிழைத்திருப்பதும் நமக்கான உன்னதமான தருணங்கள். நமது இந்த உறுதி, போருக்குப் பின்னர் ஓர் அமைதியான வாழ்க்கையை நமக்குத் தரும்.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை, தொடர்ந்து எதிர்த்து வரும் ஒவ்வொரு உக்ரைனின் ஆண்களும் பெண்களும் ஹீரோக்களே. நம் நகரத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி நமது எதிரிகள் அதனை தடம் தெரியாத அளவிற்கு அழித்து வருகின்றனர். நம்மை அவர்களால் அழிக்க முடியாது. நமது நகரத்தை நாம் மீண்டும் உருவாக்குவோம். அது ரஷ்யாவின் எந்த ஒரு நகரத்தைவிட சிறப்பானதாக இருக்கும்” என்று அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.(இந்து)