crossorigin="anonymous">
உள்நாடுபொது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் பங்களிப்பை வழங்க உதவுங்கள்-ஜனாதிபதி

தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், மின்துறை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மொத்த மின் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் இலக்கு ஆகும். இதுவரை சூரிய சக்தியில் இருந்து கிட்டத்தட்ட 700 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால், இலங்கை மின்சார சபை பொறியாளர்களின் எதிர்ப்பினால் அது சாத்தியமாகவில்லை என்பது பொதுமக்களின் கருத்து ஆகும். அதனை சரிசெய்து நிலவும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறை ரீதியாக உதவ முடியும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை மின் உற்பத்திக்கு பங்களிப்பதில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் வகையில் நேற்று (26) கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

உலகின் பல நாடுகளில் சூரிய மின் உற்பத்தி முக்கிய உத்தியாக மாறியுள்ளது. அதனைப் பின்பற்றி தற்போது நிலவும் மின் நெருக்கடிக்கு விரைவான தீர்வாக கூரையில் பொருத்தப்பட்ட சூர்ய பேனல் அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பிரதான மின் கட்டமைப்பில் தற்போது உள்ள கொள்ளளவின் அடிப்படையில் சுமார் ஆயிரம் மெகாவொட் புதிய மின் உற்பத்தி சேர்க்க முடியும் என்று மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் (பரிமாற்றம்) பி.டப்ளியு. ஹெந்தஹேவா சுட்டிக் காட்டினார்.

கனிய எண்ணையை பயன்படுத்தி ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 100 ரூபாயும், நிலக்கரியைப் பயன்படுத்தி ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஐம்பது ரூபாவை விடவும் கூடுதலாக செலவிடப்படுகிறது. மாறாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலத்தை பயன்படுத்தி வருடாந்தம் 300 பில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க அவர்கள் தெரிவித்தார்.

அனல் மின் உற்பத்திக்கு மாதம் 100 மில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவாகும். இதன்படி, தற்போதைய விலையில் மின்சாரம் வழங்குவது கடினமான பணியாக இருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக் காட்டினார்.

பாடசாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச கட்டிடங்களின் கூரைகளை சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு பயன்படுத்துவதன் மூலம் பெருமளவிலான நிலத்தை சேமிக்க முடியும் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அநுர திஸாநாயக்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 10 + = 11

Back to top button
error: