ஜனவரி 01 முதல் வரித் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்
2022ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் நேற்று முன்தினம் (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்திய உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் தொடர்பான வரித் திருத்தங்கள் குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய 2023ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
சபாநாயகரின் சான்றுரைப் படுத்தலுடன் இந்தச் சட்டமூலம் 2022ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமாக இந்நாட்டின் சட்டக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற இச்சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 83 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் பின்னர் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
வரித் திருத்தங்கள் குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய 2023ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.