இலங்கையின் 75வது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு இன்று பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் (போக்குவரத்து) ரொஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
இன்று 04 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வீதிகள் மூடப்படுவது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று அதிகாலை 5.00 மணி தொடக்கம் சுதந்திர தின வைபவ நிகழ்வுகள் முடிவடையும் வரை பம்பலப்பிட்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து மெரின் டிரைவ் வரையான வீதி மூடப்படும்
பிரதேசத்தில் வாழும் மக்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் வீதிப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
இப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் விசேட தேவைகளுக்காக, விமான நிலையம் மற்றும் வைத்தியசாலைக்கு செல்லவேண்டியுள்ளவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்,
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுதந்திர தின வைபவம் இடம்பெறும் காலத்தில், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அடையாளம் காணல் மற்றும் சோதனைகளுக்கு ஒத்துழைக்குமாறு மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் (போக்குவரத்து) ரொஷான் விஜேசிங்க பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.