2023 மார்ச் மாதம் 27ஆம் திகதி புதிய கல்வியாண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டுவிடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பின்தங்கிய பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும். அதன் பின்னர், தலைநகரை அண்டிய பாடசாலைகளுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.
இவ்வருட கல்வியாண்டுக்கான பாடநூல் வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஹோமாகம பிடிபனையில் உள்ள கல்வி வெளியீடுகள் திணைக்கள களஞ்சியசாலை வளாகத்தில் நேற்று (15) இடம்பெற்றது.
தரம் 6 முதல் தரம் 11 வரையிலான பாடங்கள் தொடர்பான அத்தியாவசிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். வழமையாக, ஒரு வருடத்திற்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 4.5 பில்லியன் ரூபா செலவாகும். இருந்த போதிலும், இம்முறை அதற்காக 16 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இந்தியக் கடன் உதவியின் கீழ், மூலப் பொருட்களை பெற்றுக் கொண்டு, அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் 45 சதவீதமான பாடப்புத்தகத் தேவையை பூர்த்தி செய்தது. எஞ்சிய 55 சதவீத பாடப்புத்தகத் தேவை, 22 தனியார் அச்சகங்களில் அச்சிடப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.