யாழ்ப்பாணத்தில் சைகை மொழி பயிற்சி நெறி
சைகைமொழி வேறுபாடுகளால் செவிப்புலனற்றோர் பாதிப்பு - மாவட்ட அரசாங்க அதிபர்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் சைகை மொழி பயிற்சி நெறியானது மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (14) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும்போது
“சமூகத்தில் செவிப்புலனற்றோர் அதிகளவில் காணப்படுவதோடு, இவர்களின் தொடர்பாடல், கல்வி, தொழில் செயற்பாடுகள் அனைத்தும் சைகை மொழி ஊடாக நிகழ்கின்றது. இச் சைகைமொழியானது சமூகம் மற்றும் நாடுகளுக்கிடையில் வேறுபடுகிறது. இந்தியாவில் 14 சைகை மொழிகள் காணப்படுகிறது.
எமது நாட்டில் தமிழ், சிங்கள, ஆங்கில சைகைமொழிகள் காணப்படுகிறது. இச் சைகைமொழியின் வேறுபாடுகளால் செவிப்புலனற்றோர் பல்வேறு பாதிப்பிற்குட்படுகிறார்கள். எனவே இச் சைகைமொழியில் காணப்படுகின்ற குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களுடைய நாளாந்த வாழ்வு, கல்வி, தொழில் மற்றும் ஏனைய விடயங்களில் நிலவும் குறைபாடுகளையும் இழிவளவாக்க முடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனத்தின் தலைவர் கே.கே.ப்ரயன் சுசந்த, இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனத்தின் செயலாளர் டி.அனில் ஜெயவர்த்தன, இலங்கை மகளிர் செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.நந்தகுமாரி மற்றும் வளவாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் திணைக்கள, முதியோர் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.