crossorigin="anonymous">
வெளிநாடு

உக்ரைன் போரை நிறுத்துமாறு ஐ.நா.சர்வதேச நீதிமன்ற உத்தரவை ரஷ்யா நிராகரிப்பு

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரஷ்யா நிராகரித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்த உக்ரைனுக்கு, அம்முடிவு தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. குண்டுகள், ஏவுகணைகளை வீசி உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

தாக்குதலில் ஏராளமானோர் இறந்துள்ளனர். சுமார் 30 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போரை நிறுத்தும்படி பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனினும், உக்ரைன் மீது ரஷ்யா தனதுதாக்குதலை அதிகரித்து வருகிறது.

போரை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிடும்படி நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் சார்பில் முறையிடப்பட்டது. குடிமக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகவும் இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும் உயிரைக் காத்துக் கொள்ள மக்கள் அகதிகளாக தப்பிச் செல்வதாகவும் விசாரணையின்போது உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தங்களது நாட்டின் தற்காப்புக்காகவே ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக ரஷ்யா தெரிவித்தது.

விசாரணை முடிந்த நிலையில், உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் தனது ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நிலைமையை மோசமாக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 6

Back to top button
error: