சீனாவிடமிருந்து மேலும் 1.5 பில்லியன் டொலரை கடனாக கோரும் இலங்கை
மேலதிக நிதி உதவியை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் சீனாவிடம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனையும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் கோரியுள்ளதாக தூதரகம் இன்று (21) விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்திற்கு மேலதிகமாக இந்த நிதி உதவியை இலங்கை கோரியுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள இம்மேலதிக நிதி உதவிக்கான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் உட்பட 2020 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளதாக Qi Zhenhong சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் உள்ள 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கடன் உட்பட மேலும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கோரியுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சீன அபிவிருத்தி வங்கிக்கு 53.596 மில்லியன் அமெரிக்க டொலர்களும், தேசிய நீர் வழங்கல் சபைக்கான 17 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சீன EXIM வங்கிக்கு 386.19 மில்லியன் யுவான்களும் இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், (மார்ச்) 18-21 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் செலுத்த வேண்டிய குறித்த நிலுவைககள் கடந்த வாரம் செலுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட Qi Zhenhong, கொழும்பு துறைமுக நகரத்தில் சீன நிறுவனங்கள் சுமார் 1.05 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அம்பாந்தோட்டையில் உள்ள கைத்தொழில் வலயத்தில் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக இதுவரை 43 நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
70 வருடங்களுக்கு முன்னர் சீனா மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது இலங்கை சீனாவுக்கு உதவியதை நினைவுகூர்ந்த சீன தூதுவர், இலங்கையின் தற்போதைய நிலைமையை சீனா சாதகமாகப் பயன்படுத்தாது என்றும் உறுதியளித்தார்.