இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது டீசல் தொகை இன்று (21)இலங்கையை வந்தடைந்தது.
35,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் இன்று (21) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபானம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட 1 பில்லியன் டொலர் கடன் உடன்படிக்கைக்கு அமைய, 500 மில்லியன் டொலர் பெறுமதியான குறித்த டீசல் தொகை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகையாகும்.
குறித்த டீசல் தொகையை தரையிறக்கும் பணி இன்று (21) காலை முதல் முன்னெடுக்கப்படுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை ஆகியவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ள நிலையில், கொலன்னாவை எண்ணெய் களஞ்சியத்து கொண்டு சென்று அங்கிருந்து, துரிதமாக விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது எண்ணெய்த் தொகை தரையிறக்கப்படும் நிலையில் துரிதமாக உரிய பிரிவுகளுக்கு விநியோகிக்கப்படுமென பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு பிரதி பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.
அத்துடன் மின்சார விநியோக நடவடிக்கைகளுக்கும் டீசலின் ஒருதொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.