அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை சம்பவம்; பல சந்தேகநபர்கள் கைது.
மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் களுபோவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார்சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன், சந்தேகநபரின் தந்தை மற்றும் சகோதரன் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி, வாள், உடைந்த இரண்டு கண்ணாடி போத்தல்கள் மற்றும் தடி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் தாய் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (21) மாலை 6.30 மணியளவில் மரணமடைந்தவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மிக வேகமாகச் சென்றதாகவும், இதன்போது மரணமடைந்த சாரதி குறித்த இளைஞரை அழைத்து, பாதுகாப்பற்ற வகையில் செல்ல வேண்டாமென தெரிவித்த சம்பவம் வாய்த்தர்க்கமாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞன் அதே பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று, தனது தந்தை, மூத்த சகோதரன், தாய் மற்றும் மேலும் இருவருடன் வந்து அவரை பொல் மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.