SYSCGAA அலுவலக முகாமைத்துவ முறைமை தொடர்பாக பயிற்சி
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள “SYSCGAA அலுவலக முகாமைத்துவ முறைமை” தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டல் பயிற்சி நேற்று (24) மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன், பிரதம உள்ளகக்கணக்காய்வாளரும் உற்பத்தித்திறன் பிரிவின் பிரதம இணைப்பாளருமான கே.லிங்கேஸ்வரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
வளவாளராக SYSCGAA அலுவலக முறைமை மென்பொருளை விருத்தி செய்த குழு அங்கத்தவரும், மன்னார் மாவட்ட சமுர்த்தி முகாமையாளருமான க.பரதன் கலந்து கொண்டார்.
பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த நிர்வாக உத்தியோகத்தர்கள், நிர்வாக கிராம அலுவலர்கள், தனிநபர் கோவை, கடிதம், விடுமுறை ஆகியவற்றுக்கு பொறுப்பான விடய உத்தியோகத்தர்கள் மற்றும் கணக்குக் கிளை, திட்டமிடல் கிளை, காணிக்கிளை ஆகியவற்றை பிரதிநிதித்துவப் படுத்தி தலா ஒவ்வொரு உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர் பிரிவில் கள உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் இரு பொருளாதார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.