அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்ட பேராதனை போதனா வைத்தியசாலையின் அனைத்து சத்திரசிகிச்சைகளும் மீள ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பேராதனை போதனா வைத்தியசாலையின் அவசர சத்திரசிகிச்சைகளை தவிர ஏனைய அனைத்து சத்திரசிகிச்சைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
பேராதனை போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் எச்.எம். அர்ஜுன திலகரத்னவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
சத்திரசிகிச்சை மற்றும் மயக்கமுறச் செய்வது தொடர்பான தொடர்பான மருந்துகள் பற்றாக்குறையாக காணப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
உதாரணமாக neostigmine எனும் மருந்து ஒரு சில நோயாளிகளுக்கு போதுமான அளவிலேயே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பில் நேற்றையதினம் (28) இடம்பெற்ற வைத்தியசாலை முகாமைத்துவ குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உள்ளிட்ட வைத்தியசாலையின் வழமையான சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய நேற்று முதல் அமுலுக்கு வரும்வகையில் மறு அறிவித்தல் வரை இவ்வாறு சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் கேள்வியுற்றுள்ள இலங்கை வந்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இது தொடர்பில் எவ்வாறு உதவலாம் என ஆராயுமாறு, இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மற்றும் வேந்தரை தொடர்பு கொண்டு, வழக்கமான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள அவசியமான மருந்துகளின் விபரங்களை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது உரிய மருந்துகளை, மருந்து விநியோகப் பிரிவு வழங்குவதாக உறுதியளித்துள்ளதால், இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையின் வழக்கமான சத்திரிசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக, பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தற்போது அறிவித்துள்ளார்.