பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கை வருகை தந்துள்ள பங்களாதேஷ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று (30) ஜனாதிபதி மாளிகையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தனர்.
கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டமை தொடர்பில் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.
மிக உயர்ந்த முறையில் மாநாட்டை நடத்துவதற்கு பங்களித்ததற்காக தமது பாராட்டைத் தெரிவித்த அமைச்சர்கள், மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரையையும் பாராட்டினர். கொவிட் தொற்றுநோயின் காரணமாக தங்கள் நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கத்தை அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.
பூட்டான் வெளிவிவகார அமைச்சர் டெண்டி டோர்ஜி (Tandi Dorji), இலங்கையில் மருத்துவக் கல்வி மிகவும் உயர் தரத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், இலங்கையில் மருத்துவக் கல்வி கற்க தமது நாட்டு மாணவர்கள் அதிகமானோருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வெளிநாட்டு மாணவர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பில் சலுகை வழங்குமாறு அமைச்சர் விடுத்த கோரிக்கை, ஜனாதிபதி அவர்களின் விசேட கவனத்திற்குட்படுத்தப்பட்டது.
பூட்டான் சேதனப் பசளை விவசாயத்தில் நாட்டம் கொண்ட ஒரு நாடாகும். அதன் செயற்திறனை திரு. டோர்ஜி அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.
நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நாராயண் கட்கா (Narayan Khadka) அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான 65 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்தார். பொதுவான, கலாசார மற்றும் மத பாரம்பரியம் கொண்ட நாடுகளாக இரு நாடுகளுக்கும் இடையே கலாசார பரிமாற்றத்தை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய திரு. நாராயண் அவர்கள், தனது நாடு திறக்கப்பட்டிருப்பதனால் பௌத்த மத சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டிற்கு வருகை தரலாம் என்றும் குறிப்பிட்டார்.
பங்களாதேஷின் பொருளாதார முன்னேற்றம் குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஏ. கே. அப்துல் மொமன் (A. K. Abdul Momen) அவர்களிடம் ஜனாதிபதி அவர்கள் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். பங்களாதேஷில் 50,000க்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார்.
இச்சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.