ஆசீர்வாத கரங்கள் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலைய திறப்பு விழா
ஆசீர்வாத கரங்கள் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலைய திறப்பு விழா நேற்றைய தினம் (30) புதன்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
ஆசீர்வாத கரங்கள் அமைப்பின் பிரதம போதகரும், தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலையத்தின் ஸ்தாபக தலைவருமான வின்சன்ட் சகாயநாதன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக 231 வது இராணுவப்படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, இந்திய சுவிசேசகர் மோகன்சீ லாசரஸ் உள்ளிட்ட மேலும் பல கலந்து சிறப்பித்திருந்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மயிலெம்பாவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மானிக்கப்பட்டு வந்த தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலையமே நேற்றைய தினம் ஆசீர்வதிக்கப்பட்டு மிகவும் கோலாகலமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டில்களில் வருகைதந்த அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலையத்தின் பிரதான பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு, பிரதான வாயிலில் 25 மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளால் நாடாவெட்டப்பட்டதனைத் தொடர்ந்து இப்பயிற்சி நிலையத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள இளைஞர் யுவதிகள் முதல் முதலாக தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலையத்திற்குள் பிரவேசித்தனர்.
இலங்கையில் உள்ள இளைஞர்கள், சிறுபிள்ளைகள், பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு நல்லதொரு ஆசீர்வாதமாக இந்த பயிற்சி நிலையம் அமையப்போவதுடன், இப் பயிற்சி நிலையத்தில் ஊடாக வாலிபர்களை சரியானதொரு தலைமைத்துவப் பண்புடையவர்களாக உருவாக்குவதற்காகவும், அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கின்ற சில விதமான பழக்க வழக்கங்கள் ஊடாக தமது வாழ்கையினை வீணாக்கிக்கொண்டிருக்கும் நிலையில் இருந்து இவர்களை சரியான வழிக்கு கொண்டு செல்வதற்கான சிந்தனையிலேயே குறித்த பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஆசீர்வாத கரங்கள் அமைப்பின் பிரதம போதகரும், தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலையத்தின் ஸ்தாபக தலைவருமான வின்சன்ட் சகாயநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.
முதல் கட்டமாக குறிப்பிட்டளவிலான இளைஞர்களை சேர்த்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பயிற்சியினை நிறைவு செய்தமையினை தொடர்ந்து, நாளடைவில் அதிகளவிலான இளைஞர்களை உள்வாங்கி இத்தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலையத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதுடன், இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் கருத்திலெடுத்தே இந்த நிலையத்தின் சேவைகள் இங்கு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கனடா, ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ்லாந்த் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பல்வேறுபட்ட சபைகளின் போதகர்கள் உள்ளிட்ட இறை விசுவாசிகள் பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.