நாசா மீன்கள் மற்றும் நுண் உயிரினங்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது
நாசா 100 க்கும் மேற்பட்ட சிறிய கணவா மீன்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட நுண் உயிரினங்களை கடந்த வியாழக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது
சோதனைகளுக்கான பிற உபகரணங்களுடன், இந்த உயிரினங்களும் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையவிருக்கின்றன. விண்வெளிப் பயணத்தின் விளைவுகளை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள இந்த சோதனைகள் உதவும் என நம்பப்படுகிறது.
ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டதை நாசா நேரடியாக ஒளிபரப்பப்பியது. நுண்ணுயிரிகளுக்கும் விலங்குகளுக்கும் விண்வெளிப் பயணத்தினால் ஏற்படும் நன்மை குறித்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக சிறிய கணவா மீன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
கணவா மீன்கள் ஒரு பிரத்யேக நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டுள்ளது. இதன் நோய் எதிர்ப்பு மண்டலம் மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒத்துள்ளது. நீண்ட விண்வெளி பயணங்களின் போது விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு இந்த சோதனை உதவும் என நாசா கூறுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் 5,000 நீர்கரடிகளும் பயணிக்கின்றன. இந்த நுண்ணுயிரி பெரும்பாலான உயிரினங்களை விட தீவிரமான சூழல்களில் வாழக் கூடியது. எனவே மிக தீவிரமான சூழல்களில் உயிரினங்கள் எவ்வாறு தாக்குபிடிக்கின்றன, எதிர்வினையாற்றுகின்றன என்பதைக் குறித்து ஆராய இந்த நுண்ணுயிரி சரியான தேர்வாக கருதப்படுகிறது. விண்வெளியில் மனிதர்களைப் பாதிக்கும் மன அழுத்த காரணிகளைப் புரிந்துகொள்ளக் கூட இந்த தகவலைப் பயன்படுத்தலாம் என நம்பப்படுகிறது.(பிபிசி)