மிரிஹான பிரதேசத்தில் ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற அமைதியற்ற சம்பவத்தில் ஏற்பட்ட சொத்துகளின் சேதம் சுமார் ரூ. 39 மில்லியன் என மட்டிடடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இன்றையதினம் (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் இராணுவ பஸ் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் பஸ்கள் 3 இற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் முச்சக்கரவண்டி 01, மோட்டார் சைக்கிள்கள் 02 ஆகியன முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், மிரிஹான தலைமையக பொலிஸ் பரிசோதகரின் கடமைக்காக வழங்கப்பட்டுள்ள Scorpio வகை ஜீப் ஒன்றிற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பஸ்கள் 02 மற்றும் பொலிஸ் நீர்த்தாரை பிரயோக வாகனம் உள்ளிட்ட வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர பாதுகாப்பு கடமைக்கான கூடாரம், தனிநபர்களின் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை ஒரு பெண் உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், விசேட அதிரடிப்படையினர் 18 பேர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் உள்ளடங்குவதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவு (CCD), குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID), மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு ஆகிய மூன்று பிரதான பிரிவினரால் இது தொடரபான விசாரணைகள்ள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த அஜித் ரோஹண இதர பொலிஸ் பிரிவினரும் ஒத்துழைப்பும் இதற்காக பெறப்படுமெனவும் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்துகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும், குற்றவியல் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு தொடரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.