இலங்கையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாடுவதற்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த காலப்பகுதியில் பொது வீதி, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது மைதானம் உள்ளிட்டவற்றில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளில் நடமாடுவதாயின், பாதுகாப்பு அமைச்சின் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.