crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் பொதுமக்களின் ஜனநாயக உரிமை – பாதுகாப்பு அமைச்சர்

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் போலீஸார் நடவடிக்கை

இலங்கை இன்று ஏப்ரல் 2 முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 4 அதிகாலை 6 மணி வரை இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த நிலையில், கடந்த 31ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டம் வலுப் பெற்றதை அடுத்து, பாதுகாப்பு பிரிவினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டங்கள் வலுப் பெற்ற பின்னணியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நேற்றைய தினம் அவசர கால சட்டத்தை அமல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (03) நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சமூக வலைத்தளத்தில் விடுக்கப்பட்ட இந்த அழைப்புக்கு பெருமளவிலான ஆதரவு வழங்கப்பட்ட நிலையிலேயே, இந்த ஊரடங்குக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவது பொதுமக்களின் ஜனநாயக உரிமை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். எனினும், ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போர்வையில், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், வர்த்தக நிலையங்களை உடைத்தல் மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகியவற்றுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் கூறுகின்றார்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோருக்கு மத்தியில், அமைதியாக இருப்போரை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை, ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை செய்யும் போது, அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு போலீஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்;வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்காக இவ்வாறு செய்தல் உசிதமானது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள சாதாரண சட்டம், இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இல்லாது செய்யப்படும் என சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதன் ஊடாக, கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரம் இல்லாது போகும் என அவர் குறிப்பிடுகின்றார். அவசரகால சட்டத்தின் ஊடாக, 3 மாத காலத்திற்கு சந்தேக நபராக அடையாளம் காணப்படும் ஒருவர் தடுத்து வைக்கப்படலாம் என அவர் கூறுகின்றார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் கைது செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கும். இந்த சட்டமானது, மிகவும் பாரதூரமான சட்டம் என சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 82 = 92

Back to top button
error: