crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் கிராமிய மைதான அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நாடு பூராகவும் சகல கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்தல் தேசிய நிகழ்ச்சித் திட்டம் முல்லைத்தீவில் இன்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட செம்மலை மகா வித்தியாலயம் மற்றும் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒரு மைதானத்துக்கு 4 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் முல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட செம்மலை மகா வித்தியாலய விளையாட்டு மைதான புணரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த மைதான அபிவிருத்தி வேலைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்கும் ஒரு மைதானத்திற்கு இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முல்லை மாவட்டத்திலுள்ள 06 பிரதேச செயலர் பிரிவுகளிலும் தலா ஒவ்வொரு விளையாட்டு மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் குறித்த மைதானத்தில் நிழல் தரு மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளதுடன் மதகுருக்களின் ஆசி உரைகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர், மதகுருக்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர், பாடசாலை நலன் விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 − = 25

Back to top button
error: