கிழக்கு மாகாணத்தின் முதலாவது புற்தரை மைதானம் திறந்துவைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முதலாவது புற்தரை கிரிக்கெட் மைதானமான கோட்டமுனை கிராமம் நேற்று (04) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நிகழ்விற்கு பிரதம விருத்தினர்களாக இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவரான அருஜுண ரணதுங்க மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், குறித்த விளையாட்டு மைதானத்தினையும் திறந்துவைத்திருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் தொழிற் தகமையுடன் கூடிய கிரிக்கெட் வீரர் ஒருவரையேனும் உருவாக்கும் நோக்குடன் கூடிய உயரிய சிந்தனையில் புலம்பெயர் உறவுகளின் 200 மில்லியன் நிதிப்பங்களிப்புடன் குறித்த கோட்டமுனை கிராம புற்தரையுடன் கூடிய விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோட்டமுனை விளையாட்டுக் கிராம தலைவர் இ.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற குறித்த விளையாட்டு கிராமத்தின் திறப்பு விழா நிகழ்வின் போது கோட்டமுனை விளையாட்டுக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும் ஸ்தாபக தலைவருமான பு.வசீகரன் உள்ளிட்டு விளையாட்டு கிராமத்திற்காக முன்னின்று உழைத்தோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வை முன்னிட்டு இருபதிற்க்கு இருபது ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் கண்காட்சி போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பல வீரர்கள் அர்ஜுண ரணதுங்க தலைமையிலான அணியுடன், உள்ளுர் வீரர்கள் ஒன்றிணைந்த மட்டக்களப்பு நாயகர்கள் எனும் அணியினருக்கு இடையில் இந்தப் போட்டி நடைபெற்றது.