கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட பினனர் 2 வாரங்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்து இலங்கைக்கு வருகின்ற இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்குட்படுவதற்கு அனுமதி வழங்கி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேஷ சுற்றுநிருபம் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்த சுற்றுநிருபத்திற்கமைய இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா அல்லது தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு நேரடியாக அல்லது இந்த நாடுகளினூடாக வருகின்ற எந்தவொரு இலங்கையருக்கும் அல்லது இரட்டை பிரஜாவுரிமை உள்ளவருக்கும் வீட்டில் தனிமைப்படுத்தலுக்குட்படுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
மேலும், நாட்டிற்கு வருகின்ற அனைத்து இலங்கையர்களும் 96 மணித்தியாலங்களுக்கு முன்பு பெறப்படுகின்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகள் அல்லது 48 மணித்தியாலங்களுக்கு முன்பு பெறப்படுகின்ற Quick antibody tests பரிசோதனை முடிவுகளினூடாக அவர்கள் கொவிட் தொற்றாளர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்த அறிக்கை கண்டிப்பாக ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும்.
அத்துடன், இலங்கைக்கு வருகின்ற இரட்டை பிரஜாவுரிமையுள்ளவர்கள் நாட்டிற்குள் வருவதற்கு 96 மணித்தியாலங்களுக்கு முன் பெறப்படுகின்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகளினூடாக அவர்கள் தொற்றாளிகள் அல்ல என்பதை உறுதிப்படுத்த வேண்டும்
கொவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றது தொடர்பாக அனைவரும், ஆங்கில மொழியில் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையொன்றை விமான நிலைய பொறுப்பதிகாரிக்கு முன்வைப்பது கட்டாயமாகும்.
இலங்கைப் பிரஜைகள் (விமானம் மூலம் வரும் இலங்கை வணிக மாலுமிகள் உட்பட) மற்றும் இரட்டை பிரஜாவுரிமை உடையவர்கள் இலங்கைக்கு வந்த பின்னர் அவர்களது பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை சான்றளிக்கப்பட்ட முதல் தர ஹோட்டலொன்றில் தங்க வேண்டும்.
பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியிட்டதன் பின்னர் குறிப்பிட்டபடி தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இலங்கையர்கள், இரட்டைப் பிரஜாவுரிமை உடையவர்கள் தங்கியிருக்கின்ற ஹோட்டல்களில் இருந்து வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும்.
தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் இருந்து விடுவிக்கப்படும் நபர்களின் பிசிஆர் அறிக்கையை அவர்களுக்கு வழங்க வேண்டும் அதன் பிரதியொன்றை தொற்று நோயியல் பிரிவுக்கு அனுப்புவதற்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கு பொறுப்பான வைத்தியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்ற சிறுவர்கள் (12 வயதுக்கு கீழ் பட்டவர்கள்) தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவிட் தடுப்பூசியை முறையாகப் பெற்ற பெரியவர்களுடன் வருகை தரும் 2-12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு அவர்களின் முடிவுகளை உறுதிப்படுத்திய பின்னர் வெளியே செல்ல முடியும்.
இவ்வாறு இலங்கைக்கு வருகின்ற பெரியவர்கள் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டால், 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்ல தனியார் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், பொதுப் போக்குவரத்தை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
தனியார் போக்குவரத்து மூலம் வீட்டிற்கு பயணம் செய்யும்போது சரியான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதுடன், வாகனங்களை இடையில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
தங்கள் வீட்டிற்கு வந்ததும், சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் வீடு அமைந்துள்ள பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து வருகைதந்தவர்கள், அவர்கள் நாட்டிற்கு வந்த திகதி உட்பட, தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறிய இடத்திலிருந்து 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தலின் கீழ் இருக்க வேண்டும்.
14 நாட்களை முழுமையாக முடித்து, கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் மற்றும் அவர்களின் 2 – 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆகியோர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அந்த அறிக்கைகளை பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்பதுடன், அந்த முடிவுகளின் படி அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.