நிதி அமைச்சர் பதவியில் அலி சப்ரி தொடர்ந்தும் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவர் நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான தற்போதைய ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறுகிறது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நிதியமைச்சரொருவர் இல்லாதமை தொடர்பில் சபையின் கவனத்திற்கு கொண்டு சென்ற வேளையில, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 3 ஆம் திகதி அமைச்சரவையைச் சேர்ந்த சகல அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர்.
இதனையடுத்து, மறுநாள் புதிதாக நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றிருந்த நிலையில், அவர்களில் முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி, நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
எனினும், அதற்கு மறுநாளான கடந்த 5 ஆம் திகதி நிதியமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், புதிதாக பதவியேற்ற 4 அமைச்சர்கள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்றைய திகதியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் நிதியமைச்சராக அலி சப்ரியின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.