ரஷ்யாவிடம் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்க சீனா ஒப்பந்தம்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ரூபாயில் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்க சீனாவும் அந்நாட்டின் நாணயமான யுவானில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் நிலக்கரி தடையை தகர்க்க ரஷ்யா திட்டமிட்டு வருகிறது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில் முதன்மையான கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷ்யா விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யவும் ரஷ்யா ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவை போலவே சீனா தனது நாட்டு நாணயமான யுவானில் பணம் செலுத்தி ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
பல சீன நிறுவனங்கள் மார்ச் மாதத்தில் ரஷ்ய நிலக்கரியை வாங்க உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. எஃகு உற்பத்தி மற்றும் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி முழுமையாக யுவானில் செலுத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் வழக்கமாக டாலர்களில் செய்யப்பட்டு வந்தன. அமெரிக்க, ஐரோப்பிய தடையால் டாலர்களில் பரிவர்த்தனை செய்ய முடியாத சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரஷ்யாவில் ஏற்றப்பட்டுள்ள முதல் நிலக்கரி சரக்கு கப்பல் இந்த மாதம் வரும் என்று சீனாவின் எனர்ஜி இன்பர்மேஷன் சர்வீஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யாவிற்கு தடை விதித்த பிறகு யுவானில் செலுத்தப்பட்ட முதல் சரக்கு ஏற்றுமதி இதுவாகும்.
அதுபோலவே ரஷ்ய கச்சா எண்ணெய் விற்பனையாளர்கள் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள சீனாவின் யுவானில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. யுவானில் வாங்கப்பட்ட கச்சா எண்ணெய் மே மாதத்தில் சீன சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
உலக வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக தனது நாணயமான யுவானை வர்த்தக நாணயமாக்கும் முயற்சியில் சீனா ஏற்கெனவே ஈடுபட்டு வருகிறது. இப்போது உக்ரைன்- ரஷ்யா மோதலுக்கு பின்பு ஏற்பட்டுள்ள சூழலை சீனா தீவிரமாக பயன்படுத்திக் கொள்ளும் எனத் தெரிகிறது.(இந்து)