திருகோணமலை கல்வி வலய “கல்வி அபிவிருத்திக் குழு மாநாடு-2022”
திருகோணமலை கல்வி வலயத்தில் 2022 ஆம் வருடம் முதல் எதிர்வரும் மூன்று வருடகாலத்திற்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளை ஆராயும் மாநாடு நேற்று முன்தினம் (7) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் .எச்.இ.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பிரதிக்கல்விப் பணிப்பாளர் அவர்களது வரவேற்புரையுடன் ஆரம்பமான மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் “கிழக்கு மாகாணத்தில் கல்வி முன்னேற்றகர செயற்பாட்டிற்கு கல்வி வலயங்களின் பங்களிப்புக்கள்.” என்ற தொனியில் தனது திட்ட முன்வைப்பினைச் செய்திருந்தார்.
“கல்வி அபிவிருத்தியில் உற்பத்தித் திறன்விருத்தி என்பது பாடசாலைகளில் உயர் மட்டத்தில் காணப்படல் வேண்டும் என்றும், அதற்காக நாம் அனைவரும் ஒருமித்து செயற்படல் அவசியம் எனவும் மற்றும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் அனைத்திலும் வீண்விரயம் தவிர்க்கப்படல் முக்கியம்.” எனவும் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் தனது திட்ட முன்வைப்பில் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
வலயக்கல்வி அலுவலக கிளைத் தலைவர்கள், கோட்டக்கல்விப் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் வாண்மை விருத்தி, தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலைய பொறுப்பாளர்களால் தத்தமது பிரிவின் கீழ் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட, தற்சமயம் மேற்கொள்ளப்படும் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் செயற்திட்டங்கள் பற்றிய திட்ட முன்வைப்புக்கள் முன்வைக்கப்பட்டன.
மாநாடானது திருகோணமலைக் கல்வி வலய அபிவிருத்திக் குழுவினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்ததுடன் திருகோணமலைக் கல்வி வலயத்தின் கீழ் தமிழ், சிங்கள மொழி மூலப் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் அலுவலக கல்வி சார் அதிகாரிகளும், அலுவலகக் கிளைத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.