எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய 75 வயது ஆர்தர் முர்
அமெரிக்காவின் சிகாகோவில் வசிக்கும் 75 வயது ஆர்தர் முர், எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறித் திரும்பியிருக்கிறார். எவரெஸ்ட்டில் ஏறிய வயதான அமெரிக்கர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்!
வழக்கறிஞர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஆர்தருக்கு மலையேற்றத்தில் ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. கடினமாகப் பயிற்சிகளை மேற்கொண்டார். எந்த மலையேற்ற வீரருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதுதான் லட்சியமாக இருக்கும். ஆர்தருக்கும் அது இருந்தது. 5 ஆண்டுகள் மேற்கொண்ட கடினப் பயிற்சிகளுக்குப் பிறகு, 2019-ம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏறினார். ஆனால், மலையேறும்போது கீழே விழுந்ததில் அவருடைய தோள்பட்டையில் மோசமான காயம் ஏற்பட்டதால், அந்த முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டது.
சில மாதங்களில் உடல்நிலையைச் சரிசெய்துகொண்டு, மீண்டும் எவரெஸ்ட்டில் ஏறுவதற்குத் தயாரானார் ஆர்தர். ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக மலையேற்றம் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் ஓராண்டு காத்திருந்து, தற்போது எவரெஸ்டில் ஏற முயன்றார். ஜூன் முதல் வாரத்தில் வானிலை சரியில்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. சில நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, ஆர்தர் எவரெஸ்ட்டில் ஏறினார். இரண்டாவது முயற்சியிலேயே அவர் சிகரத்தை அடைந்துவிட்டார்.
“இலக்கை அடைந்துவிட்டேன் என்று சொன்னபோது ஆனந்தத்தில் அழுதுவிட்டேன். நான் மிகவும் சோர்வடைந்திருந்ததால், என்னால் இலக்கை அடைய முடியாது என்றே நினைத்திருந்தேன். போட்டோ எடுப்பவர்களுக்குக்கூட என்னால் எழுந்து நின்று போஸ் கொடுக்க முடியவில்லை. உட்கார்ந்தே இருந்தேன். அதனால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தேன். என் குடும்பத்தினரின் அன்பை நினைத்துக்கொண்டே இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். சென்ற எவரெஸ்ட் முயற்சியில் ஒரு பேரன் பிறந்தான். அவனுக்கு எவரெஸ்ட் என்றுதான் பெயர் சூட்டியிருக்கிறேன். இந்த முயற்சியிலும் ஒரு பேரக்குழந்தை பிறந்து என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருக்கிறது” என்கிறார் ஆர்தர் முர்.
மலையேற்றத்தில் ஆர்தருக்கு ஆர்வம் வந்ததற்குக் காரணம் அவர் அப்பா. சின்ன வயதாக இருக்கும்போதே இமயமலை தொடர்பான புத்தகங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார். 1963ஆம் ஆண்டு அமெரிக்க மலையேறும் குழு முதல் முறை எவரெஸ்ட்டில் ஏறியது. அடுத்த ஆண்டு அந்தக் குழுவினர் ஆர்தரின் பள்ளிக்கு வந்தனர். அவர்களைச் சந்தித்த பிறகு மலையேற்றம் அவரின் லட்சியமாக மாறிவிட்டது. 7 ஆண்டுகளுக்கு முன்பு நண்பரோடு சேர்ந்து, உயரமான மலைகளில் மலையேற்றங்களைச் செய்ய ஆரம்பித்தார். தற்போது தன் லட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்.
2014ஆம் ஆண்டு அமெரிக்காவின் பில் பர்க், 72 வயதில் தன் இரண்டாவது முயற்சியில் எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்ததுதான் சாதனையாக இருந்தது. தற்போது ஆர்தர் முர், அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறார்.
”அமெரிக்காவில் எவரெஸ்ட்டை அடைந்த முதியவன் நானாக இருக்கலாம். ஆனால், எனக்கு முன்மாதிரியாக இருந்தவர் ஜப்பானைச் சேர்ந்த யுச்சிரோ மியுராதான். 2013ஆம் ஆண்டு 80 வயதில் எவெரெஸ்ட்டை அடைந்திருக்கிறார். என் உடல், மன வலிமையை அறிந்துகொண்டுதான் மலையேற்றங்களைச் செய்து வருகிறேன்” என்கிறார் ஆர்தர் முர்.(ஹிந்து)