பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர்களின் கவனத்திற் கொள்ளும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வினால் அவரது முகநூலில் இடப்பட்ட பதிவுக்கு பாதுகாப்பு அமைச்சு பதிலளித்துள்ளது.
அமைதியான முறையில் போராட்டம் மேற்கொள்பவர்கள் மீது இராணுவம் அதிகாரத்தை தேவையற்ற முறையில் பயன்படுத்த எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் அமைதியான போராட்டங்களை ஒடுக்க இராணுவப் படைகள் அனுப்பப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு எவ்வாறாயினும், வன்முறை ஏற்படும் சந்தர்ப்பத்தில் தேசத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து இலங்கையர்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொலிஸாரினால் உதவி கோரப்படும் சந்தர்ப்பத்தில் இராணுவம் பொலிஸாருக்கு ஒத்துழைப்பை வழங்கும்.
நாட்டையும் மக்களையும் நேசிக்கும் இலங்கையின் பாதுகாப்பு படையினர் தார்மீக ரீதியில் நேர்மையானவர்கள் என சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர்
அமைதியான முறையில் இடம்பெறும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் புலனாய்வு பிரிவினர் அனுப்பப்பட்டு அவர்களில் ஊடாக வன்முறையை ஏற்படுத்தவோ அல்லது குண்டு தாக்குதல்களை மேற்கொண்டு போராட்டக்காரர்களை கலைப்பதற்கு முப்படையினர் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வெறுமனே வதந்திகள் மாத்திரமே தவிர அதில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைதியான போராட்டத்தின் போது அவர்களின் உள்நோக்கங்களை அடையச் செயல்படும் பல்வேறு தரப்பினரின் செயட்பாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டும் பாதுகாப்பு அமைச்சு, அமைதியான போராட்டங்கள் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கோ அல்லது தனியார் சொத்துக்களுக்கோ சேதங்களை ஏற்படுத்துபவர்கள் மற்றும் அதற்கு தலைமை வகிப்பவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க முப்படைகளும் பொலிஸாரும் பொறுப்புடன் நேர்மையுடனும், மரியாதையுடனும் நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படுவதற்கான தங்களால் முடியுமானதை செய்வார்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது