அமைச்சர் நாமல் ராஜபக்ச 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் பிரதமராகப் பதவியேற்பார் என பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி கணித்துக் கூறியுள்ளார்.
ஆனால் அமைச்சர் நாமல் ராஜபக்ச 2022 ஆம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்பார் என்பது உறுதிப்படுத்தாத தகவல் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் “அமைச்சர் நாமல் ராஜபக்ச சுறுசுறுப்பாகப் பல்வேறு வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். அவர் 2022ஆம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்கப் போகின்றாரா?” என கேள்வி எழுப்பினார்.
“இது அரசியல் ரீதியான சந்தேகங்களை ஏற்படுத்தும் தகவலாகும். இதனை யார் வெளியிட்டார் என்பது தெரிந்திருந்தாலும், நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்பவில்லை. இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் அரசியல் ரீதியான சந்தேகங்கள் பரப்பப்படுகின்றன.
இது போன்ற கருத்துக்களை அரசு பாரதூரமாக எடுப்பதில்லை. பொறுப்புள்ள ஊடகவியலாளர்கள் இதனை ஒரு பெரும் சிக்கலாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்” என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய (08) ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.