இடைக்கால அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் ஆவண காப்பாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவிக்கின்றார்.
நாடு எதிர்நோக்கியுள்ள சமுக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதில் வழங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இடைகால அரசாங்கத்தை ஸ்தாபிக்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன், பொருளாதார பிரச்னைகளை விரைவில் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதாக ஜனாதிபதி பதில் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்களை நடத்தி, அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்;த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக மெதகம தம்மானந்த தேரர் தெரிவிக்கின்றார்.
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும அண்மையில் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் அமைச்சரவையில் அங்கம் வகித்த பலரும் தற்போது அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக நாடாளுமன்றத்தில் ஆளும் அரசாங்கத்துடன் இருந்த சுமார் 40 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், இந்த அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றி, ஜனாதிபதியினால் வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில பதவியிலிருந்து விலகுவதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.(பிபிசி)