முல்லைத்தீவு மாவட்ட செயலக உள்ளக விளையாட்டுப் போட்டி
மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உள்ளக விளையாட்டுப் போட்டி 2022 இன்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றைய தினம் இருபாலாருக்குமான சதுரங்கப் போட்டிகள் இடம்பெற்றன.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு பண்டாரவன்னியன்(சிவப்பு) இல்லத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும், அரியாத்தை(பச்சை) இல்லத்துக்கு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களும், முல்லைமணி(நீலம்) இல்லத்துக்கு மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன் அவர்களும், தலைமை தாங்குகின்றனர்.
இதனூடாக விளையாட்டின் மூலம் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தி உத்தியோகத்தர்களின் ஒற்றுமை, வினைத்திறனை அதிகரிக்கச் செய்தல். மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே தொடர்பாடல் மூலமாக புரிந்துணர்வை அதிகரித்து, ஒருங்கிணைந்து செயற்படும் மனப்பாங்கினை கட்டியெழுப்புதல், மற்றும் கூட்டாண்மையினை விருத்திசெய்தல். கூட்டு முயற்சி தேகாரோக்கியம் நன்நடத்தை விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு மதிப்பளித்தல் போன்ற நன்மைகளை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள நிலையில் பெரும்பாலான கிளைகளில் புதிய நிரந்தர நியமனம் மற்றும் இடமாற்றத்தின் கீழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவருக்குமிடையில் தொடர்பாடலை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ் இருபாலாருக்குமான துடுப்பாட்டம், கரம், சதுரங்கம், பூப்பந்தாட்டம், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஆண்கள் பிரிவிற்கான உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டத்துடன் நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகளும் இடம்பெறவுள்ளன. பெண்கள் பிரிவினருக்கான வலைப்பந்தாட்ட போட்டியுடன் கலப்பு இரட்டையர் பூப்பந்தாட்ட போட்டியும் இடம்பெறவுள்ளன.
அனைத்து போட்டிகளும் சுற்று முறையில் நடைபெறவுள்ளதுடன் அதிக புள்ளிகளைப்பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.