எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டேன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் சங்கம் ஆகியோருடன் அலரிமாளிகையில் இன்று (26) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒட்டு மொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என கோரி, இலங்கை முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்ற பின்னணியிலேயே, பிரதமர் இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளார்.(பிபிசி)