சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான DNA பரிசோதனைக்கு, சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் தோண்டியெடுக்கும் நடவடிக்கை இன்று (27) நடைபெற்று வருகின்றது
2019 சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை, இவ்வாறு தோண்டியெடுக்க கல்முனை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 26ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் உள்ளிட்டோர் தற்கொலைக் குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்திருந்தனர்.
இதன்போது 17பேர் மரணமடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்த போதிலும், கட்டுவாபிட்டி ஆலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட சாரா ஜெஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மஹேந்திரன் பெண்ணின் உடல் பாகங்கள் DNA சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
மீண்டுமொரு முறை குறித்த சடலங்களை தோண்டி எடுத்து சோதனையிட அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளதன் அடிப்படையில், கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.