மியான்மரில் ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு
ஏற்கெனவே 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு
மியான்மரில் 2017-18-ல் யாங்கூன் முன்னாள் முதல்வர் பையோ மின் தீனிடமிருந்து 6 லட்சம் டாலர் மற்றும் 7 தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், சூகிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இந்த தகவலை பெயர் வெளியிட விரும்பாத சட்டத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சூகியின் வழக்கறிஞர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் தொடரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் ஆங் சான் சூகி. இவருடைய தேசிய ஜனநாயக பேரவை கட்சி 2015-ல் ஆட்சியைப் பிடித்தது. எனினும், சட்ட ரீதியாக அவர் ஜனாதிபதி பதவியை ஏற்க முடியவில்லை. பிரதமருக்கு இணையான ஆலோசகர் பதவியில் நீடித்தார்.
பின்னர் 2020-ல் நடந்த தேர்தலிலும் அவரது கட்சி வெற்றி பெற்றது. எனினும் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் மீண்டும் கைப்பற்றியது. சூகி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கரோனா விதிகளை மீறியது, லஞ்சம் வாங்கியது என ஆங் சான் சூகி மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சட்ட விரோதமாக வாக்கி டாக்கி இறக்குமதி செய்து பயன்படுத்தியது, கரோனா விதிகளை மீறியது தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு நீதிமன்றம் ஏற்கெனவே 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.(இந்து)