இலங்கையில் தற்பொழுது நிலவிவரும் வலுசக்தி, மின்சக்தி மற்றும் எரிவாயு தொடர்பான பிரச்சினைகளின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வர்த்தக மற்றும் சமுர்த்திஅபிவிருத்தி அமைச்சர் செஹான் சேமசிங்க, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முன்னிலையில் இன்று (28) அழைக்கப்பட்டனர்.
தற்போதைய நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
இந்தியன் ஒயில் நிறுவனம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இங்கு தெரிவித்தார்.
இந்த இரு அமைச்சுக்களுக்கும் புதிய செயலாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போதைய நிலைமைய முகாமைத்துவம் செய்து எதிர்வரும் சில நாட்களில் இப்பிரச்சினைகளை வெற்றிகொள்ள அதிகாரிகளுடன் இணைந்து முடிந்தளவு முயற்சித்து வருவதாகவும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்களுக்கு அமைச்சர் எடுத்துக் கூறினார். அத்துடன், இந்த நிலைமைக்கான காரணங்கள் மற்றும் நிர்வாகத்தில் காணப்பட்ட குறைபாடுகள் அடங்கிய விரிவான அறிக்கையொன்றை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க முத்துராஜவல முனையம் இருபத்தி நான்கு மணித்தியாலங்களும் இயங்குவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான பணியாளர் குழாம் முடிந்தளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரிக்கான கொடுப்பனவு இன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய அடுத்த செப்டெம்பர் மாதம் வரை தேவையான நிலக்கரி காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், விமான சேவைகள் மற்றும் மின்சார சபைக்குத் தேவையான எரிபொருட்களை நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இதற்கு கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை நாட்டின் மின்சாரக் கட்டமைப்புக்குள் இணைப்பதற்கு எதிராகக் காணப்படும் தடைகள் தொடர்பில் குழுவின் உறுப்பினர்கள் விசேட கவனம் செலுத்தியிருந்தனர். இதற்கமைய சர்வகட்சிக் குழுவொன்றை உருவாக்கி அதன் ஊடாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பான சட்டத்திருத்தத்தை எதிர்காலத்தில் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும், இதன் ஊடாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை மின்சாரக் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்றும் மின்சார சபையின் தலைவர் இங்கு தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் செஹான் சேமசிங்கவும் தற்போதைய எரிவாயுத் தட்டுப்பாடு குறித்து உரையாற்றினார். இந்திய கடன் வசதி மற்றும் உலக வங்கி கடனுதவியின் கீழ் எரிவாயு விநியோகம் சாதாரண நிலைக்கு கொண்டு வரப்படும் எனவும் எதிர்வரும் காலங்களில் எரிவாயு விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.