திண்மக் கழிவு முகாமைத்துவ “பின்லா” செயற்திட்டம் முன்னெடுப்பு
திண்மக் கழிவு முகாமைத்துவத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான “பின்லா” செயற்றிட்ட ஊடகவியலாளர் கலந்துரையாடல் நேற்றைய தினம் (29) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஜெற்விங் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இலங்கையில் கழிவு முகாமைத்துவத்தை முறையாக பேணும் பொருட்டு அரச சார்பற்ற நிறுவனங்களான செவனத மற்றும் வேல்விஷன் நிதி அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தென் பகுதியில் யாகல, வத்தளை ஆகிய பிரதேசங்களில் ஏற்கனவே குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அத்திட்டம் யாழ்.மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேசத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் மக்களின் மூலம் வெளியேற்றப்படும் திண்மக்கழிவுகளை எப்படி முகாமைத்துவம் செய்வது, இலங்கையில் தற்கால கழிவு முகாமைத்துவத்தின் பொதுவான எண்ணக்கருக்கள், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திண்மக்கழிவு முகாமைத்துவங்கள் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பங்கு மற்றும் இலங்கை கழிவு முகாமைத்துவத்தின் கொள்கை மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாட்டிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி எதிர்கால ஆரோக்கியமான இலங்கையை கட்டியெழுப்ப முன்வர வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதன், பின்லா செயற்திட்ட முகாமையாளர் அத்துல ரணசிங்க, நிமல் பிறேமதிலக( பின்லா), வளவாளர்களாக யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட இரசாயன பிரிவின் பேராசிரியர் ஜி. சசிகேசன் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாகாண அலுவலர் சுபாஷினி சசீலன் மற்றும் யாழ்.மாவட்ட செயலக அரசாங்க தகவல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.